உத்தர பிரதேசத்தில் ரெயில்வே பெண் போலீசை கொடூரமாக தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை


உத்தர பிரதேசத்தில் ரெயில்வே பெண் போலீசை கொடூரமாக தாக்கிய நபர் என்கவுண்ட்டரில்  சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Sep 2023 9:13 AM GMT (Updated: 22 Sep 2023 9:18 AM GMT)

உத்தர பிரதேசத்தில் ரெயில்வே பெண் போலீசை கொடூரமாக தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜ்சங்கம் வரை சராயு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி இந்த ரெயிலில் பெண் போலீஸ் ஒருவர் பயணித்தார். அப்போது பெண் போலீசை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பெண் போலீஸ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை மீட்ட பயணிகள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல் நலம் தேறியுள்ளார்.

ஓடும் ரயிலில் பெண் போலீஸ் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் போலீசின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் அயோத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த விசாரணையின்போது அனீஷ் கான் என்பவர் தான் பொண் போலீசை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அனீஷ் கானை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில்,அனீஷ் கான் தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து, சிறப்பு அதிரடி படையினர் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அனிஷ் கான் உள்பட 3 பேர் இருந்தனர்.

போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றனர். உடனே சுதாரித்த போலீசார், தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் அனீஷ் கான் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆசாத், விசாம்பர் தயால் ஆகிய இரண்டு பேரும் காயம் அடைந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். ரெயிலில் பெண் போலீஸ் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீசார் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு இருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story