மலிவு விலையில் லெஹாங்காவா? கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்: சோகத்தில் வீடு திரும்பிய மணமகன்...!


மலிவு விலையில் லெஹாங்காவா? கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்: சோகத்தில் வீடு திரும்பிய மணமகன்...!
x

மலிவு விலையில் லெஹாங்காவா? கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்: சோகத்தில் வீடு திரும்பிய மணமகன்...!

ராஞ்சி,

திருமணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று முன்னோர்கள் கூறினர். அனைத்துக் காலத்திலும், பிரச்சினைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். இந்த காலத்தில் எதற்கு எடுத்தாலும் குறை சொல்வது வாடிக்கையாகி விட்டது. வித விதமாக நடைபெறும் சம்பவங்களால் சில திருமணங்கள் எதிர்பாராத விதமாக நிற்பதை பார்த்திருக்கிறோம். அவற்றில் சில காரணங்கள் திகைப்பூட்டும் விதமாகவும் இருந்துவிடுகிறது.

அந்தவகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மணப்பெண் தனது திருமணத்தை பாதியில் நிறுத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வாணி பகுதியைச்சேர்ந்த ஆணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இருவருக்குமான திருமணத் தேதி நவம்பர் 5ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கப்படி மணப்பெண்ணுக்கு திருமணத்திற்கான உடையை மணமகன் வீட்டார் எடுத்து தர வேண்டும். இதற்காக லெஹங்கா உடை ஒன்றை மணமகன் வீட்டார் வாங்கியுள்ளார். இந்த உடையை மணப்பெண்ணுக்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஸ்பெஷலாக வாங்கி வந்தோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் பெண்ணுக்கோ உடையில் திருப்தி இல்லை என கூறப்படுகிறது. சந்தேகத்துடனே ஆடை குறித்து பெண் விசாரித்ததில் அந்த ஆடை உத்தரப் பிரதேசத்தில் ஸ்பெஷலாக ஒன்றும் எடுக்கவில்லை. அதன் விலை ரூ.10,000 என்ற உண்மை வெளிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் இவ்வளவு மலிவான விலை எடுத்த உடையை என்னால் அணிந்து கொள்ள முடியாது என முரண்டு பிடித்துள்ளார். இதனால், மணமகன் வீட்டார் பதறிப்போன நிலையில், மணமகனின் தந்தை தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பிடித்த உடையை நீ வாங்கிக்கொள் என்று கூறி சமாதானம் செய்ய பார்த்துள்ளார். இருப்பினும் பெண் சமாதானம் ஆகாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

தொடர்ந்து இரு வீட்டார் இடையே அடிதடி ஏற்பட்டு, மணமகன் வீட்டார் இது தொடர்பாக கோடாவாலி போலீசாரிடம் புகார் அளித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி செட்டில்மென்ட் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மலிவு விலை லெஹாங்கா வாங்கித் தந்த காரணத்திற்காக கோலாகலமாக ஏற்பாடு செய்து வைத்த திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story