தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வான உத்தரகாண்ட் மந்திரி திடீர் மரணம்
தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வான உத்தரகாண்ட் மந்திரி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த நிலையில், 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்டில் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி அரசில் போக்குவரத்து மற்றும் சமூக நலன் மந்திரியாக இருந்து வந்தவர் சந்தன் ராம் தாஸ். அவருக்கு இன்று நெஞ்சு வலிக்கிறது என கூறியுள்ளார்.
இதனால் அவரை பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
அமைச்சரவையின் மூத்த மந்திரியான அவரது திடீர் மறைவு, அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது இழப்பு பொது சேவை மற்றும் அரசியலில் ஈடு செய்ய முடியாத இழப்பு என முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உத்தரகாண்ட் சட்டசபைக்கு 2007-ம் ஆண்டு முதல் பாகேஷ்வர் தொகுதியில் இருந்து, தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக சந்தன் ராம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து, வருகிற 28-ந்தேதி வரை 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதன்படி உத்தரகாண்டில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது துறை வங்கிகள் இன்று மூடப்பட்டன.