உத்தரகாண்ட் சுரங்க விபத்து; மீட்புப் பணியின்போது திடீரென கேட்ட பயங்கர சத்தம்..!


உத்தரகாண்ட் சுரங்க விபத்து; மீட்புப் பணியின்போது திடீரென கேட்ட பயங்கர சத்தம்..!
x

இடிபாடுகளில் துளையிடும் பணி சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி 6 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கும் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் ஆகியவை குழாய் மூலம் வழங்கப்பட்டு வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இடிபாடு நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உதவியுடன் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்க இடிபாடுகள் வழியாக துளையிட்டு சுமார் 3 அடி அகலம் கொண்ட குழாயை உள்ளே செலுத்தி அதன் மூலம் தொழிலாளர்கள் 40 பேரையும் வெளியேற்ற மீட்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளை மீட்புப் படை வீரர்கள் மேற்கொண்டபோது திடீரென விரிசல் ஏற்படும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்புப் படை வீரர்கள், சிறிது நேரத்திற்கு இடிபாடுகளில் துளையிடும் பணியை நிறுத்தி வைத்தனர். மேலும் துளையிடும் கருவியில் சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்த பிறகு மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story