உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 14வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்...!
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலைக்காக மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதில், சில்க்யாரா-தண்டல்கான் இடையேயான 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும்பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை பணியின்போது சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விபத்துக்குள்ளானது. அதனால், சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து, தொழிலாளர்களை மீட்க தேசிய,மாநில பேரிடர் மீட்புப்படையினர் உள்பட பல அரசுத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சுரங்கப்பாதைக்குள் துளையிடும் பிரமாண்ட எந்திரம் மூலம் சுரங்கத்தில் துளையிடும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், சுரங்க இடிபாடுகளில் அதிக அளவு இரும்பு கம்பிகள் இருப்பதால் எந்திரம் மூலம் சுரங்கத்தில் துளையிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுரங்க இடிபாடுகளில் உள்ள இரும்பு கம்பிகளை வெட்டி எடுக்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிகள் இன்று 14வது நாளாக நீடித்து வருகிறது.
சுரங்க இடிபாடுகளில் உள்ள இரும்பு கம்பிகளை அகற்றினால் மட்டுமே துளையிடும் பிரமாண்ட எந்திரம் மூலம் மீண்டும் மீட்புப்பணிகளை தொடர முடியும். அதேவேளை, சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மலையில் இருந்து செங்குத்தாக துளை அமைத்து தொழிலாளர்களை மீட்கலாமா? என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்காக மலைப்பகுதிக்கு துளையிடும் எந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.