அரசு பஸ்சுக்கும் லாரிக்கும் இடையே சிக்கி அப்பளம் போல் நசுங்கிய வேன் - குழந்தைகள் உட்பட 9 பேர் பலி
கர்நாடகாவில் அரசு பஸ்சுக்கும் லாரிக்கும் இடையே வேன் சிக்கிய விபத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகே நேற்று இரவு 11 மணி அளவில் 20-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அந்த சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடிபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர். ஆனால் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது வரைக்கும் 9 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 4 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்து.
மேலும், படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.