வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வாட்டர் மெட்ரோ; ரூ.3,200 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வாட்டர் மெட்ரோ; ரூ.3,200 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
x

கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், வாட்டர் மெட்ரோ உள்பட ரூ.3,200 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

திருவனந்தபுரம்,

பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டார். அவரது இந்த சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியாக, மத்திய பிரதேசத்தின் ரேவா நகரில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு, மொத்தம் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார்.

அதன்பின்னர், நேற்று மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் நின்று கொண்டு மக்களை நோக்கி கையசைத்து பயணிக்கும் வழக்கம் இன்றி, இந்த முறை வேட்டி அணிந்தபடி சாலையில் நடந்தே சென்றார். மக்களும் பூக்களை தூவி அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதன்பின்பு, கேரளாவில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். அவருடன் முதல்-மந்திரி பினராயி விஜயனும் மேடையில் ஒன்றாக பங்கேற்றார். இதன்படி, கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், கொச்சி வாட்டர் மெட்ரோ மற்றும் பல்வேறு ரெயில்வே வளர்ச்சி பணிகள் உள்பட ரூ.3,200 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

நீர் வழியேயான இந்த மெட்ரோ பயண திட்டம், சவுகரியம், வசதி, பாதுகாப்பு, நேரந்தவறாமை, நம்பக தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தன்மை உள்ளிட்ட பிற மெட்ரோ பயண திட்டங்களில் உள்ளது போன்ற விசயங்களை கொண்டது. அதே அனுபவம் அளிக்க கூடியது. பயணம் செய்வதும் எளிது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடி கூட்டத்தின் முன் பேசும்போது, நாட்டின் நலனிற்காக விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க கூடிய ஒரு முடிவெடுக்கும் திறன் பெற்ற அரசு மத்தியில் உள்ளது என இந்தியாவின் மீது உலக நாடுகள் நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளன என்று புகழ்ந்து பேசியுள்ளார். கேரளா வளர்ச்சி கண்டால் மட்டுமே விரைவான வளர்ச்சி விகிதங்களை இந்தியா அடைய முடியும் என்றும் அப்போது அவர் பேசினார்.


Next Story