'நவராத்திரிக்கு பெண்கள் உண்ணாவிரதம் இருப்பதை விட அரசியலமைப்பை படிப்பது சிறந்தது' என கூறிய விரிவுரையாளர் சஸ்பெண்ட்
சிறப்பு விரிவுரையாளரை மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்தது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபதி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் மிதிலேஷ் குமார் கவுதம்.
இந்நிலையில், கவுதம் தனது சமூகவலைதள பக்கத்தில், நவராத்திரிக்கு பெண்கள் உண்ணாவிரதம் இருப்பதை விட இந்திய அரசியலைப்பை படிப்பது சிறந்தது என பதிவிட்டிருந்தார்.
'நவராத்திரியின் போது பெண்கள் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதை விட இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து கோட்பாட்டு மசோதாவை படிப்பது சிறந்தது. பெண்களின் வாழ்க்கை அச்சம் மற்றும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறும்' என பதிவிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் - இன் மாணவர் பிரிவு அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அமைப்புகள் சார்பில் சிறப்பு விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்கலைகழகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, மிதிலேஷ் குமார் கவுதமை அரசியல் அறிவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளர் பணியில் இருந்து நீக்கி மகாத்மா காந்தி காசி வித்யாபதி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.