கர்நாடகத்தின் 13-வது முதல்-மந்திரி வீரப்பமொய்லி
கர்நாடக மாநிலத்தின் 13-வது முதல்-மந்திரியான வீரப்பமொய்லி, தட்சிணகன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா மரபடி கிராமத்தில் கடந்த 1940-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி பிறந்தார். மங்களூருவில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், பெங்களூரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மொய்லி, கடந்த 1972-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உடுப்பி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். மேலும் கடந்த 1974-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் மந்திரி சபையில் சிறு தொழில்கள் துறை மந்திரியாக பதவி வகித்தார்.
இதேபோல் கடந்த 1980-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற இவர், முதல்-மந்திரி குண்டுராவ் மந்திரிசபையில் நீதித்துறை மற்றும் திட்டமிடுதல் துறை மந்திரியாக பொறுப்பேற்றார். மேலும் 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் ஜனதா கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற இவரை காங்கிரஸ் கட்சி அப்போது எதிர்க்கட்சி தலைவராக நியமித்தது. 1988-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற இவர், முதல்-மந்திரிகளான வீரேந்திர பட்டீல், பங்காரப்பா ஆகியோரின் மந்திரிசபையில் சட்டத்துறை, இளைஞர்நலன், கலாசாரத்துறை ஆகிய பதவிகளை வகித்து உள்ளார்.
முதல்-மந்திரி பங்காரப்பா மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து கடந்த 1992-ம் ஆண்டு அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு மொய்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த இவர், நிதித்துறையை கூடுதலாக அப்போது கவனித்து வந்தார். இவர் நிதித்துறை மந்திரியாக இருந்த காலகட்டங்களில் மாநில அரசு உபரி வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலத்தின் நீர்வளத்தை பெருக்க ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை தீட்டிய வீரப்பமொய்லி, அதற்காக உலக வங்கி மற்றும் ரிசர்வ் வங்கிகளில் கடன் வாங்கிய ரூ.13 ஆயிரம் கோடி செலவில் 'கிருஷ்ணா ஜலபாக்யா நிகாம்' என்ற மிகப்பெரிய பாசன திட்டத்தை செயல்படுத்தினார்.
இதைதொடர்ந்து தேசிய அரசியலில் கால்பதித்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இவர் எம்.பி.யாக தேர்வானார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங் மந்திரி சபையில் சட்டம், கம்பெனி விவகாரங்கள், பெட்ரோலியத்துறை மந்திரிகளாக பதவி வகித்து உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் தற்போது எம்.பி.யாகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ளார்.