தராசை தண்டவாளத்தில் வீசிய போலீசார் - எடுக்க சென்றபோது ரெயில் மோதி காலை இழந்த சிறுவன்
17 வயதான சிறுவன் ரெயில் நிலையம் அருகே பழ வியாபாரம் நடத்தி வந்துள்ளான்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் 17 வயது சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்துவந்துள்ளான்.
இந்நிலையில், ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யும்படி கூறிய போலீசார் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை தண்டவாளத்தில் வீசினர்.
இதனால், தண்டவாளத்தில் போலீசார் வீசிய தராசை எடுக்க சிறுவன் இர்பான் சென்றான். அப்போது, வேகமாக வந்த ரெயில் இர்பான் காலில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இர்பானின் கால் துண்டானது. இதனால், இர்பான் அலறி துடித்தான்.
இதனையடுத்து, சிறுவன் இர்பானை மீட்ட அருகில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இழந்த காலை மீண்டும் பொறுத்தமுடியாமல் போனது. இதனால், சிறுவன் இர்பான் தனது காலை இழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தராசை ரெயில் தண்டவாளத்தில் வீசி சிறுவனின் கால் இழக்க காரணமான தலைமை காவலர் ராகேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கண்டன குரல் எழுந்தது. இதையடுத்து, தலைமை காவலர் ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின் ராகேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.