மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து: போலீஸ் வாகனத்தை இடைமறித்து தாக்குதல்


மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து: போலீஸ் வாகனத்தை இடைமறித்து தாக்குதல்
x

மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நபரை போலீஸ் வாகனத்தை இடைமறித்து கும்பல் தாக்கியது.

ஐதராபாத்,

கடவுள் மறுப்பு அமைப்பை சேர்ந்தவர் பைரி நரேஷ் (வயது 42). இவர் கடந்த ஆண்டு இந்து மத கடவுள் ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதன் பின் சமீபத்தில் அவர் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கனம்கொண்டாவில் உள்ள சட்டக்கல்லூரியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பைரி நரேஷ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தன்னை தாக்க சிலர் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு தரும்படியும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து உடனடியாக வந்த போலீசார், நரேஷை போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் வாகனத்தை இடைமறித்த காரில் வந்த கும்பல் நரேஷை கடுமையாக தாக்கியது. போலீஸ் வாகனத்திற்குள் புகுந்து நரேஷை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. போலீசார் தடுக்க முயற்சித்தபோதும் தொடர்ந்து தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் விரைந்து சென்று நரேஷை மீட்டனர். மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.




Next Story