விசா முறைகேடு வழக்கு: முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு


விசா முறைகேடு வழக்கு: முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு
x

கோப்புப்படம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் சீன நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் மும்பை போலீசார், சென்னை, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 17-ந்தேதி சோதனை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரும் ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை, சிபிஐ சென்னையில் 17-ந்தேதி நள்ளிரவில் கைது செய்து, நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க 4 நாட்கள் அவகாசம் அளித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story