பிரதமர் தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரெயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்
பிரதமர் மோடி ஜனவரி 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரெயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி நடத்திய தாக்குதலில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தாக கூறப்படுகிறது.
விசாகப்பட்டினம்,
செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15-ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.
ரெயில் பாதுகாப்புப் படையினரின் முதற்கட்ட விசாரணையில், புதன்கிழமை இரவு காஞ்சரபாலத்தில் உள்ள கோச் வளாகத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் சிலர் ரெயில் மீது கற்களை வீசி இருக்கலாம். இதனால் ரெயில் பெட்டியின் கண்ணாடி உடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பராமரிப்பு சோதனைக்காக வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வந்தது. விசாகப்பட்டினம் வந்தவுடன், ரேக் கஞ்சரபாலத்தில் உள்ள புதிய கோச் வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த சம்பவம் நிகழ்ந்தாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீஸார் மற்றும் ஆர்பிஎப் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. ஒரு ஜன்னல் கண்ணாடி முழுவதுமாக உடைந்த நிலையில், மற்றொரு கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
குற்றத்தை செய்த நபர்களைத் தேடி வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.