ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிப்பது காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவது போல் ஆகும்


ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிப்பது காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவது போல் ஆகும்
x

ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிப்பது காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவது போல் ஆகும் என்று ஹாசனில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

ஹாசன்:-

தேர்தல் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஹாசன் மாவட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஹாசன் மாவட்டம் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு சொந்த ஊராகும். இந்த நிலையில் ரோடு ஷோ நடத்திய அமித்ஷா, பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது:-

நீங்கள் மாநில கட்சிகளுக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சியை காப்பாற்றுவது போன்றதாகும். அதாவது நீங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிப்பது காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவது போல் ஆகும். அதனால் நீங்கள் பா.ஜனதாவை தேர்வு செய்ய வேண்டும்.

வம்சத்தினர் தோற்கடிப்பு

பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றியடைய செய்து பிரதமர் மோடியின் கையை வலுப்படுத்த வேண்டும். கடந்த முறை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நீங்கள் ஆதரவு அளித்தீர்கள். ஆனால் அவர்கள் முடிவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தனர். நீங்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களா?. உங்கள்(வாக்காளர்கள்) ஓட்டு வீணாக கூடாது என்றால் நீங்கள் பா.ஜனதாவையும், அதன் வேட்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும்.

ஹாசன் வம்சத்தினரை தோற்கடித்து பா.ஜனதாவைச் சேர்ந்த பிரீதம் கவுடா நல்ல வேலையை செய்துள்ளார். அவரது செயல்பாடுகளால் பா.ஜனதா ஹாசன் மாவட்டத்தில் பல தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் இந்த முறை பா.ஜனதா வெற்றிபெறும். மேலும் இங்கு தாமரை மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story