நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது


நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 19 April 2024 7:18 AM IST (Updated: 19 April 2024 7:22 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் மற்றும் 2 மாநில சட்டசபை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல்

கடந்த மாதம் 16-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி (இன்று) முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான்-நிகோபார், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. அருணாசலபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்பட உள்ளது.

அருணாசல பிரதேச தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எனவே மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

சிக்கிம் சட்டசபை தேர்தல்

இதைப்போல சிக்கிம் மாநில சட்டசபைக்கும் தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் மற்றும் 2 மாநில சட்டசபை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினரும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story