போட்ட சபதம் நிறைவேறியது: 21 ஆண்டுகளுக்கு பிறகு தாடியை எடுத்த நபர்...!
போட்ட சபதம் நிறைவேறியதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் தாடியை எடுத்துள்ளார்.
சத்தீஸ்கர்,
காதல் தோல்வி என்றால் மட்டும் தான் தாடி வளர்க்க வேண்டுமா என்ன?. சபதம் நிறைவேறவும் தாடி வளர்க்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சத்தீஸ்கரில் ஒருவர் இருந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆர்.டி.ஐ அலுவலரான ராம சங்கர் குப்தா என்பவர், சிர்மிரி - பாரத்பூர் பகுதிகளை சேர்த்து சத்தீஸ்கரின் 32வது மாவட்டமாக அறிவிக்கப்படும் வரை தாடியை வெட்டவே மாட்டேன் என்று சபதம் பூண்டிருந்தார்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதி 32-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராம சங்கர் ஒருவழியாக தனது சபதம் நிறைவேறிய மகிழ்ச்சியில் தாடியை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டே இந்த பகுதியை மாவட்டமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போதே தாடியை அவர் எடுத்துவிட்டார். பின்னர் பணிகள் தொடங்கப்படாத நிலையில் மீண்டும் தாடி வளர்க்க தொடங்கினார்.
இந்நிலையில், தற்போது பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து, அவர் ஒரு வருடம் வளர்ந்த தாடியை மீண்டும் எடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த பகுதி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை என்றால், வாழ்நாள் முழுவதும் தாடி வளர்த்திருப்பேன் என்று மலைக்க வைத்துள்ளார்.