போர், மோதல், பயங்கரவாதம்... கடினம் வாய்ந்த ஆண்டை கடந்து வந்துள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு


போர், மோதல், பயங்கரவாதம்... கடினம் வாய்ந்த ஆண்டை கடந்து வந்துள்ளோம்:  பிரதமர் மோடி பேச்சு
x

சர்வதேச தெற்கு குரலுக்கான உச்சிமாநாட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி போர், மோதல், பயங்கரவாதம் போன்ற பல விசயங்கள் நிறைந்த கடினம் வாய்ந்த ஆண்டை நாம் கடந்து வந்துள்ளோம் என குறிப்பிட்டு உள்ளார்.



புதுடெல்லி,


சர்வதேச தெற்கு குரலுக்கான உச்சிமாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று பேசி வருகிறார். இந்த மாநாட்டில் 120 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதில், சர்வதேச அளவில் தென்பகுதியில் அமைந்த நாடுகள் கூட்டாக இணைந்து தங்களது நோக்கங்கள் மற்றும் முக்கியம் வாய்ந்த விசயங்களை பொதுதளம் ஒன்றில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இதன்படி, ஒரே குரல், ஒரே நோக்கம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதன் பின்னர் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, போர், மோதல், பயங்கரவாதம் மற்றும் புவிஅரசியல் பதற்றங்கள், உயர்ந்து வரும் உணவு, உரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற கடினம் வாய்ந்த மற்றொரு ஆண்டின் பக்கங்களை நாம் கடந்து வந்துள்ளோம்.

இவற்றில் பெருமளவிலான சர்வதேச சவால்கள் சர்வதேச தென்பகுதி நாடுகளால் உருவாக்கப்படவில்லை. ஆனால், அவை நம்மை பாதித்தன. உலகளாவிய தென்பகுதி நாடுகள் வருங்காலத்திற்கான பெரும் பங்குகளை கொண்டுள்ளன. மனிதஇனத்தின் 4-ல் 3 பங்கு மக்கள் நமது நாடுகளிலேயே வசித்து வருகின்றனர்.

வளர்ச்சிக்கான அனுபவ விசயங்களை எப்போதும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இந்தியா பகிர்ந்து வந்துள்ளது என பிரதமர் மோடி தனது பேச்சின்போது கூறியுள்ளார்.


Next Story