மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து பிரதமருக்கு போதிய தெளிவு இல்லை - ராகுல் காந்தி


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து பிரதமருக்கு போதிய தெளிவு இல்லை - ராகுல் காந்தி
x

இந்த திட்டம், லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு என்பதை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை.

வயநாடு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். வயநாட்டில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்தை கடந்த 24 ஆம் தேதி சிலர் அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில், தனது தொகுதியை பார்வையிடுவதற்காக, ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரள மாநிலம் வயநாடு சென்றுள்ளார்.நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான அலுவலகத்தைப் பார்வையிட்டு கட்சியினருடன் உரையாடினார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' குறித்து பிரதமருக்கு போதிய தெளிவு இல்லை என்று குற்றம்சாட்டினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக பிரதமர் பேசியதைக் கேட்டதும், மக்களவையில் நான் அதிர்ச்சியடைந்தேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோல்விகளுக்கு உதாரணமாக, நினைவுச்சின்னமாக இந்த திட்டம் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

அரசு கருவூலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வடிகால் இது என்று அவர் அழைத்தார். இதன்மூலம், இந்த திட்டத்தின் ஆழத்தை பிரதமர் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை என்பதை இது எனக்கு உணர்த்தியது.இந்திய தொழிலாளர் சந்தையை இந்த திட்டம் என்றென்றும் மாற்றியுள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

இந்த திட்டம், லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு என்பதையும், இந்த திட்டம் தான் இப்போது மக்களுக்கு கை கொடுக்கும் கடைசி வழியாக இருக்கிறது என்பதை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை."

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2006ம் ஆண்டு, முதற்கட்டமாக சில மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டு, பின் 2008 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது, 2009ல் காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story