காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத சிறுமி சீமா மான்ஜி ...!


காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத சிறுமி சீமா மான்ஜி ...!
x
தினத்தந்தி 26 May 2022 7:48 AM GMT (Updated: 26 May 2022 8:53 AM GMT)

'சீமாவின் ஆர்வம் என்னை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. அனைத்து குழந்தைகளும் நல்ல கல்வி பெற வேண்டும் என விரும்புவார்கள்.

பாட்னா

பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டம் மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு வசிக்கும் 10 வயது சிறுமியான சீமா மான்ஜியை தான் தற்போது பலரும் வியந்து பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.

10 வயதான சீமாவின் தந்தை கூலி தொழிலாளர். இவர் வேறு மாநிலங்களுக்கு சென்று தான் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். சீமாவின் தாயாரும் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். சீமாவின் உடன் பிறந்தோர் 5 பேர். ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையான சீமாவுக்கு இரண்டு ஆண்டுகள் முன் விபத்தில் சிக்கியதில் ஒரு கால் இல்லாமல் போனது.

விபத்தில் தனது ஒரு காலை இழந்தாலும் இந்த சிறுமி நம்பிக்கையை இழக்காமல் தினமும் ஒரு கிமீ தூரம் ஒற்றை காலிலேயே பள்ளிக்கு சென்று படித்து வருகிறார். தனது வீட்டிலிருந்து தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் உற்சாகம் குறையாமல் நொண்டி அடித்துக்கொண்டே பள்ளி செல்லும் சிறுமி சீமாவின் வீடியோ இணையதளத்தில் தற்போது வைராலகி வருகிறது. இந்த சிறுமிக்கு இணையவாசிகள் மட்டுமல்லாது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில்,'சீமாவின் ஆர்வம் என்னை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. அனைத்து குழந்தைகளும் நல்ல கல்வி பெற வேண்டும் என விரும்புவார்கள்.அனைத்து அரசும் அதை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். சீமா போன்ற குழந்தைகளுக்கு கல்வி பெற அளிப்பதே உண்மையான நாட்டுப் பற்று' எனக் கூறியுள்ளார்.

அதேபோல், பாலிவுட் நடிகர் சோனு சூட்டும், இதுவரை ஒரு காலில் துள்ளி குதித்து நடக்கும் சீமாவுக்கு இரு கால்களில் துள்ளி குதிக்கும் காலம் வந்து விட்டது என சீமாவின் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இதற்கிடையே பீகார் ஜாமுய் பகுதி மாவட்ட ஆட்சியரும் மாணவிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கி, மேலும் தேவையான உதவிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். தான் சிறப்பாக படித்து ஆசிரியராக வேண்டும் என கனவு கொண்டுள்ள சீமா, தன்னைப் போலவே பலருக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதே நோக்கம் என மனதில் உறுதியுடன் கூறுகிறார்.
Next Story