ஜி20 மாநாடு: நாட்டுப்புற இசைக்கு நடனமாடிய சர்வதேச நாணய நிதிய தலைவி - வைரல் வீடியோ
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.
டெல்லி,
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது.
இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா நேற்று இரவு இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
ஜி20 மாநாட்டிற்கு வரும் தலைவர்களை வரவேற்கும் வகையில் டெல்லி விமான நிலையத்தில் இசை, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லி வந்த சர்வதேச நாணய நிதிய தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா விமான நிலையத்தில் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார். அப்போது, நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடிய நிலையில் அதை கண்டு மகிழ்ச்சியடைந்த கிறிஸ்டலினா தானும் நடனமாடினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.