ரெயிலில் மொபைல் பறிக்க முயன்ற திருடன் கையை பிடித்து கொண்டு 15 கி.மீ. தூரம் ஜன்னலில் தொங்கவிட்ட பயணிகள்
பீகார் பெகுசராயில், ரயில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை, அப்படியே பிடித்து 15 கி.மீ. தூரம் ஜன்னலில் தொங்கவிட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார்
பாட்னா:
ரெயில் நிலையத்தில் திருட்டு, பிக்பாக்கெட் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன். பெரும்பாலும் திருடர்கள் ஓடும் ரயிலின் ஜன்னல் அல்லது கதவில் புகுந்து தப்பி விடுகிறார்கள். சில நேரங்களில் பயணிகளின் விலையுயர்ந்த போன்களைக் கூட பறித்துச் செல்கின்றனர்.
பீகாரின் ரெயில் ஒன்றில் ஜன்னல் வழியே பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், பயணிகளிடம் கைகள் சிக்கிக்கொள்ளக் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டருக்கு மேல் ஜன்னலில் தொங்கிய சம்பவம் நடந்திருக்கிறது. அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.மொபைல் திருடனுக்கு நடுங்கும் அளவுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் சமஸ்திபூர்-கதிஹார் பயணிகள் ரயில் சாஹேப்பூர் கமால்-உமேஷ்நகர் இடையே சென்று கொண்டிருந்ததாக இந்த சம்பவம் குறித்து கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், பயணிகளிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட திருடன், பலமுறை தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதாகத் தெரியவருகிறது. பீகாரின் பெகுசராயில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், பயணிகளிடம் சிக்கிக்கொண்ட திருடன் தனது கைகளை விட்டு விட வேண்டாம் என்று கெஞ்சுவதைக் காணலாம். என்னை விட்டு விடாதீர்கள் என்று தொடர்ந்து கெஞ்சுகிறார்.பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கபட்டார்.
சாஹேப்பூர் கமால் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்ற மொபைல் திருடன் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.