'எங்களுக்கும் கடவுள் ராமர் மீது நம்பிக்கை உள்ளது' - காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜிவாலா


எங்களுக்கும் கடவுள் ராமர் மீது நம்பிக்கை உள்ளது - காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜிவாலா
x

ஏழைகளின் வீடுகளில் ராமரைக் காணலாம் என ரன்தீப் சுர்ஜிவாலா எம்.பி. தெரிவித்தார்.

சண்டிகர்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.

இந்த நிலையில் 'அனைவரையும் போல் எங்களுக்கும் கடவுள் ராமர் மீது நம்பிக்கை உள்ளது' என அரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

"ஏழைகளின் வீடுகளில் ராமரைக் காணலாம். ராமர் என்றால் சகோதரத்துவம். ராமர் கஷ்டங்களை போக்குபவர், தியாகங்களை செய்தவர். எனவே ராமரை அரசியலாக்க முடியாது. அவரது கோவில் விழாவை ஆர்.எஸ்.எஸ் அல்லது பா.ஜ.க.வின் நிகழ்ச்சியாக ஆக்க முடியாது.

அனைவரும் நம்புவது போல் எங்களுக்கும் கடவுள் ராமர் மீது நம்பிக்கை உள்ளது. ராமர் என்றால் நம்பிக்கை. அவர் பெயரில் அரசியல் செய்ய முடியாது. வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினைகளில் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக ராமர் பெயரில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது.


Next Story