நாங்கள் பாலம் கட்டினோம், பா.ஜ.க. அழித்தது: தேஜ் பிரதாப் குற்றச்சாட்டு; பதிலடி வழங்கிய பா.ஜ.க.
பீகாரில் கட்டுமான பணியில் இருந்த பாலம் ஓராண்டுக்குள் 2 முறை இடிந்து விழுந்த சம்பவத்தில் பா.ஜ.க. மீது ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான தேஜ் பிரதாப் குற்றம் சாட்டியுள்ளார்.
பாட்னா,
பீகாரின் பாகல்பூரில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4-ந்தேதி பாலம் திடீரென இடிந்து விழுந்தது. ஒரே ஆண்டில் 2-வது முறையாக பாலம் இடிந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுபற்றி முதல்-மந்திரி நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், இந்த சம்பவத்திற்கு யார் காரணம்? என அடையாளம் காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த விவகாரத்தில் சுதந்திர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பாட்னா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு உள்ளது.
பாலம் இடிந்த சம்பவம் பற்றி ராஷ்டீரிய ஜனதா தள தலைவர்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ் கூறும்போது, பாலம் பா.ஜ.க.வால் அழிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பாலம் கட்டி வந்தோம். அவர்கள் அதனை அழித்து கொண்டிருக்கிறார்கள் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் இன்று கூறும்போது, நான் இதுபற்றி என்ன கூற முடியும்? கடவுள் அவருக்கு நல்ல அறிவை கொடுக்கட்டும்.
நிதிஷ் அவர்களே, ரூ.1,700 கோடியில் 2 நாடாளுமன்ற கட்டிடங்களை கட்டியிருக்க முடியும். இந்த தொகையை உங்களது அரசு வீணடித்து விட்டது. வரி செலுத்துவோரின் பணம் மீது மரியாதை அளிக்க அவர்கள் கற்று கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.