ஆதித்ய தாக்கரேவின் பெயரை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் அளிக்கவில்லை; பரத் கோகவாலே


ஆதித்ய தாக்கரேவின் பெயரை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் அளிக்கவில்லை; பரத் கோகவாலே
x

பாலாசாகேப் தாக்கரே மீதுள்ள மதிப்பிற்காக எம்.எல்.ஏ. ஆதித்ய தாக்கரேவின் பெயரை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் அளிக்கவில்லை என கொறடா பரத் கோகவாலே கூறியுள்ளார்.



புனே,



மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க. கைகோர்த்து கூட்டணி அமைத்துள்ளது. மராட்டிய சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதனால், மராட்டிய சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளார். துணை முதல்-மந்திரியாக முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.

சிவசேனாவின் 55 எம்.எல்.ஏ.க்களில் 40க்கும் மேற்பட்டோர் ஷிண்டே அணியிலும், உத்தவ் தாக்கரே அணியில் 15 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனையடுத்து சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனாவின் ஷிண்டே பிரிவை சேர்ந்த கொறடா பரத் கோகவாலே கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொறடா உத்தரவை மீறி எம்.எல்.ஏ. ஆதித்ய தாக்கரே ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிராக வாக்களித்துள்ளார் என கூறப்படுகிறது. கொறடாவின் உத்தரவை மீறி சட்டசபைக்குள் வாக்களிக்கும் உறுப்பினர்களின் பதவியை பறிக்க அதிகாரமுள்ளது. இதனை பயன்படுத்தி சிவசேனா கொறடா பரத் கோகவாலே சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் புகார் அளித்துள்ளார். இதனால், ஆதித்ய தாக்கரேவின் எம்.எல்.ஏ. பதவி பறிபோக கூடிய நிலை ஏற்பட்டது.

இதுபற்றி பரக் கோகவாலே செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எங்களது கொறடா உத்தரவை மீறிய அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீசுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். பாலாசாகேப் தாக்கரே மீதுள்ள மதிப்பிற்காக அவரது (ஆதித்ய தாக்கரே) பெயரை நாங்கள் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

அவரின் (ஆதித்ய தாக்கரே) பெயரை தகுதி நீக்கம் செய்வதற்கு நாங்கள் அளிக்கவில்லை. இதுபற்றி முதல்-மந்திரி முடிவு மேற்கொள்வார் என்று சிவசேனாவின் தலைமை கொறடா பரத் கோகவாலே கூறியுள்ளார்.


Next Story