காவிரி விவகாரத்தில் போராட்டங்களை ஒடுக்க மாட்டோம்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


காவிரி விவகாரத்தில் போராட்டங்களை ஒடுக்க மாட்டோம்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் போராட்டங்களை ஒடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

காவிரி விவகாரத்தில் போராட்டங்களை ஒடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

மனு தள்ளுபடி

காவிரி விவகாரத்தில் பெங்களூரு முழு அடைப்பு போராட்டம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தமிழக அரசு முதலில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்றும், பிறகு வினாடிக்கு 7 ஆயிரத்து 200 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்றும் கேட்டது. ஆனால் நாங்கள்(கர்நாடக அரசு), வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் கூட தங்களால் திறக்க முடியாது என்று கூறினோம். எங்களின் இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. இதுகுறித்து நாங்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு 26-ந் தேதி (இன்று) விசாரணைக்கு வருகிறது. அப்போது நாங்கள் எங்களின் வாதத்தை அழுத்தமாக எடுத்து வைப்போம். ஜனநாயகத்தில் போராட்டங்களை ஒடுக்க முடியாது. ஆனால் அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டியது அவசியம். பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முயற்சி செய்கின்றன.

கர்நாடகத்தின் நலன்

அவர்கள் அரசியல் செய்வதால், அரசை குறை சொல்வதை தவிர வேறு என்ன சொல்வார்கள்?. அனைத்துக்கட்சி கூட்டத்தில் அவர்கள் எந்த குறையும் சொல்லவில்லை. கர்நாடகத்தின் நலனை காக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அந்த பணியை நாங்கள் தீவிரமாக செய்வோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story