மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; நாளை மறுநாள் முதல் பிரசாரத்தில் ஈடுபட மம்தா பானர்ஜி முடிவு


மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; நாளை மறுநாள் முதல் பிரசாரத்தில் ஈடுபட மம்தா பானர்ஜி முடிவு
x

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் பிரசாரத்தில் ஈடுபட மம்தா பானர்ஜி முடிவு செய்து உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. வருகிற ஜூலை 8-ந்தேதி ஒரே கட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா கூறினார். இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி கடந்த 15-ந்தேதி என அறிவிக்கப்பட்டது.

இந்த வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளில் வன்முறை, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பரவியதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பல பகுதிகளில் பதற்றம் காணப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரசார் இருப்பதாக இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் அக்கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வருகிற 26-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் வடக்கு வங்காளத்தின் கூச் பெஹாரில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 2-வது இடம் பிடித்தது. எனினும், முந்தின தேர்தலை விட அதிக வாக்குகளை கைப்பற்றி இருந்தது. இந்த சூழலில், இந்த தேர்தலில் பெரும் வெற்றியானது, கட்சிகளின் பலம் என்ன என்று வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story