மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் மம்தா கட்சி அமோக வெற்றி: 2-வது இடத்தில் பா.ஜனதா


மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் மம்தா கட்சி அமோக வெற்றி: 2-வது இடத்தில் பா.ஜனதா
x

கோப்புப்படம்

மேற்கு வங்காள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மம்தா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. 2-வது இடத்தில் பா.ஜனதா உள்ளது. நாளைதான் முழு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிகிறது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது.

மொத்தம் 73 ஆயிரத்து 887 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 80.71 சதவீத வாக்குகள் பதிவாகின.

144 தடை உத்தரவு

வாக்குப்பதிவின்போது வாக்குப்பெட்டி எரிப்பு, துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன. 17 பேர் பலியானார்கள். வன்முறை நடந்த 696 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் மறுவாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. 22 மாவட்டங்களில் 339 மையங்களில் காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அப்பணி தொடங்கியது. மையங்களுக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

ஆயுதம் தாங்கிய மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

வெடிகுண்டு வீச்சு

ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாக தொடங்கியநிலையில், ஆங்காங்கே திரிணாமுல் காங்கிரசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

எதிர்க்கட்சிகளின் முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைய விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாகவும், வெடிகுண்டு வீசுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார்.

ஆனால், தோல்வி உறுதி ஆகிவிட்டதால், பா.ஜனதா பழி போடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது.

அமோக வெற்றி

மாலை 5.30 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 63 ஆயிரத்து 229 ஊராட்சி உறுப்பினர் இடங்களில், 23 ஆயிரத்து 344 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. அவற்றில், 16 ஆயிரத்து 330 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 3 ஆயிரம் இடங்களில் முன்னிலையில் இருந்தது.

பா.ஜனதா 3 ஆயிரத்து 790 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 1,365 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 886 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

மொத்தம் உள்ள 928 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில், 18 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 18 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. எனவே, இத்தேர்தலில் அக்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கை முடிவடைய இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார். இதனால், வியாழக்கிழமைதான் முழு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிகிறது.

1 More update

Next Story