மேற்கு வங்காள பள்ளியில் குண்டு வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணை கோரி மத்திய மந்திரிக்கு கடிதம்


மேற்கு வங்காள பள்ளியில் குண்டு வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணை கோரி மத்திய மந்திரிக்கு கடிதம்
x

மேற்கு வங்காளத்தில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி என்.ஐ.ஏ. விசாரணை கோரி மத்திய உள்துறை மந்திரிக்கு சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.


கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தீர்த்தாகார் பகுதியில் ப்ரீ இந்தியா என்ற பெயரில் உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில், பள்ளியில் கடந்த 17-ந்தேதி திடீரென குண்டு ஒன்று வெடித்து உள்ளது.

இதில், பள்ளியின் மேற்கூரை பலத்த சேதமடைந்தது. இதனால், அந்த பகுதியில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆசிரியர்களும் மாணவர்களும் சம்பவ பகுதிக்கு சென்றனர். போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

எனினும் இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. யாரும் காயம் அடையவில்லை என கூறப்பட்டது. இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பள்ளியில் குண்டுவெடிப்பு பற்றிய தகவல் அறிந்து சென்றோம்.

அந்த பள்ளியில் முன்பே குண்டு பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது அந்த சமயத்தில் வீசி எறியப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதா? என விசாரித்து வருகிறோம். தேவைப்பட்டால் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இந்த நிலையில், மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி, பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி தேசிய புலனாய்பு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அரசால் உதவி பெறும் பள்ளியில் கடந்த 17-ந்தேதி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

சம்பவம் நடந்த பின்பு, தைரியம் வரவழைத்து கொண்டு ஆசிரியர்கள் மாடிப்படி ஏறி மேலே சென்று பார்த்ததில், மேற்கூரையில் வெடிகுண்டு சிதறல்களை கண்டுள்ளனர். மேற்கூரையின் ஒரு பாதி முற்றிலும் சேதமடைந்து இருந்தது என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

பாரக்பூர் காவல் ஆணையரகம் இந்த விவகாரத்தில் மூடி மறைக்கும் வேலையில் சிறப்புடன் செயலாற்றுகிறது என தெரிவித்துள்ள சுவேந்து அதிகாரி, குண்டுவெடிப்பு பற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளதுடன், வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், ஒட்டுமொத்த பள்ளி கட்டிடமும் அதிரும் வகையில் குண்டுவெடிப்பு இருந்தது என்றும் அதனால், அவர்கள் பயத்தில் உறைந்து போய் விட்டனர் என்றும் கூறப்படுகிறது.


Next Story