மேற்கு வங்காள வன்முறை; கவர்னரை சந்தித்து பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு கோரிக்கை


மேற்கு வங்காள வன்முறை; கவர்னரை சந்தித்து பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு கோரிக்கை
x

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் பா.ஜ.க.வின் 5 நபர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து போலீஸ் விசாரணை கோரியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த ஜூலை 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் நடைபெற்றது. 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். 22 ஜில்லா பரிஷத்துகளுக்கான 928 இடங்கள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான 9,730 இடங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான 63,239 இடங்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்றது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த பஞ்சாயத்து தேர்தல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எனினும், பல பகுதிகளில் வாக்கு மையம் சூறையாடப்பட்டும், வாக்கு பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தின. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன.

தேர்தலை முன்னிட்டு நடந்த வன்முறைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். தேர்தல் அறிவித்ததில் இருந்து மொத்தம் 45-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு உயிரிழந்து உள்ளனர்.

தொடர்ந்து, மேற்கு வங்காளத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்பட்டது. இதில், வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இந்த தேர்தலில், மொத்தமுள்ள 63,229 கிராம பஞ்சாயத்துக்கான தேர்தலில் பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. பா.ஜ.க. 2-வது இடம் பிடித்தது.

தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் பலர் பலியானார்கள். வீடுகள் சூறையாடப்பட்டன. இது பற்றி விசாரிக்க பா.ஜ.க. சார்பில் 5 நபர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த குழு கவர்னர் ஆனந்த் போசை சந்திக்க கொல்கத்தா நகருக்கு இன்று வருகை தந்தனர். இதனை தொடர்ந்து, கவர்னரை சந்தித்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை முறையிட்டனர்.

அவர்களுடன் கட்சியின் மக்களவை எம்.பி. ரவி சங்கர் பிரசாத் வந்து உள்ளார். அவர் கூறும்போது, மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் பல வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

சி.சி.டி.வி. கேமிராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒவ்வொரு விசயமும் அழிக்கப்பட்டு உள்ளன. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என யாரும் தாக்குதலுக்கு தப்பவில்லை. மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

நாங்கள் கவர்னரை சந்தித்து போலீஸ் நடவடிக்கை தேவை என்று கேட்டு இருக்கிறோம். இது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. அனைத்து விசயங்களும் கவர்னர் வசமே உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.


Next Story