இந்தியாவின் பல்லுயிர் பெருக்க கொள்கைகளால் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; பிரதமர் மோடி
சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், இன்று காலை நடைபெறும் மண்ணைக் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது;-
பருவ நிலை மாறுபாட்டில் இந்தியா பங்கு தவிர்க்க முடியாதது என்று இருக்கும் பட்சத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பாக மண்வளம் குறித்து நமது விவசாயிகள் அறிந்து இருக்கவில்லை. இப்பிரச்னையை போக்க, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
கங்கை நதி வழித்தடத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என நடப்பு பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். இந்தியா இன்று பின்பற்றி வரும் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் தொடர்பான கொள்கைகள் மூலம், வனவிலங்குகள் எண்ணிக்கை சாதனை படைக்கும் அளவு அதிகரித்துள்ளது. பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கும் திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு முன்பாகவே இந்தியா எட்டியுள்ளது" என்றார்.