மணிப்பூர் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசியது என்ன..?
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளாக நேற்றும் விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரிகள், பாஜக எம்.பி.க்கள் பேசினர்.
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பதிலளித்து பேசினார்.
அப்போது மணிப்பூர் குறித்து அவர் கூறுகையில், "மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமைச்சர் அமித்ஷா நேற்று விரிவான விவரங்களை அளித்துள்ளார். அமித் ஷா வெளியிட்ட விவரங்களை கண்ட பிறகு மக்களுக்கு எதிர்க்கட்சிகள் செய்த பாவங்கள் தெரியவந்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் அமித்ஷா மேற்கொண்டார்.
மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் அமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன். ஐகோர்ட்டின் ஒரு உத்தரவுதான் மிகப்பெரிய வன்முறையை தூண்டிவிட்டுள்ளது. மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய மாநில அரசுகள் முழுமையாக முயற்சி செய்கின்றன. மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார். மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது தலையாய பணி.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம். மணிப்பூரின் தற்போதைய சூழலுக்கும் காங்கிரசின் அரசியலே காரணம். வட கிழக்கு மாநிலங்களை நேரு புறக்கணித்ததால் அதன் விளைவுகளை தற்போது அனுபவிக்கிறோம். மணிப்பூர் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. மணிப்பூரில் பெண்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
இதனைத்தொடர்ந்து மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.