மொகிதீன் பாவாவுக்கு டிக்கெட் பறிபோனதன் காரணம் என்ன?
மங்களூரு வடக்கு தொகுதியில் மொகிதீன் பாவாவுக்கு டிக்கெட் பறிபோக காரணம் என்ன என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
மங்களூரு:-
மொகிதீன் பாவாவுக்கு டிக்கெட் இல்லை
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு வடக்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. மொகிதீன் பாவா டிக்கெட் கேட்டு எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளரான இனயத் அலிக்கு காங்கிரஸ் கட்சி டிக்கெட் கொடுத்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த மொகிதீன்பாவா, ஜனதாதளம் (எஸ்) கட்சியில் தேசிய தலைவர் தேவேகவுடா முன்னிலையில் இணைந்தார். மேலும் அக்கட்சி சார்பிலேயே அவர் மங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சிவக்குமார் மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் மொகிதீன் பாவா மங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டு இருந்தேன். அதுேபால் இனயத் அலியும் கேட்டிருந்தார். கட்சி நடத்திய சர்வேயில், எனக்கு 78 சதவீத பேர் ஆதரவும், அவருக்கு 7 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்தனர். எனக்கு தான் டிக்கெட் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் டி.கே.சிவக்குமார் அந்த டிக்கெட்டை விற்றுள்ளார். எனக்கு டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு டி.கே.சிவக்குமார் தான் காரணம். மங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடையவே அவர் இவ்வாறு செயல்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் என்ன?
இதற்கிடையே மங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரசில் போட்டியிட மொகிதீன் பாவா, இனயத் அலி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியுள்ளது. இதனால் யாருக்கு டிக்கெட் கொடுப்பது என இழுபறி நீடித்து வந்தது. இறுதியில் மொகிதீன் பாவாவுக்கே டிக்கெட் கொடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளார். இதற்கிடையே மொகிதீன்பாவாவுக்கு டிக்கெட் கொடுக்கும்படி மற்றொரு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போன் போட்டு வலியுறுத்தியதாகவும், இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்சி மேலிடம் இறுதியில் இனயத் அலிக்கு டிக்கெட் கொடுத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.