பெங்களூருவில் இருந்து இயங்கும் தமிழக தொலைதூர பஸ்களின் நிலை என்ன?; பயணிகள் பரபரப்பு கருத்து


பெங்களூருவில் இருந்து இயங்கும் தமிழக தொலைதூர பஸ்களின் நிலை என்ன?; பயணிகள் பரபரப்பு கருத்து
x

பெங்களூருவில் இருந்து இயங்கும் தமிழக தொலைதூர பஸ்கள் என்ன நிலையில் இருக்கிறது என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தமிழக அரசு பஸ்கள்

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் வசதிக்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு சாந்திநகரில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, உடன்குடி, பாபநாசம், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், ராமேசுவரம், குமுளி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாய்வு இருக்கை பஸ்களும், படுக்கை வசதி கொண்ட பஸ்களும், குளுகுளு வசதி கொண்ட பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இதுபோல் மைசூரு ரோட்டில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தாம்பரம், சேலம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது சாதாரண இருக்கைகள் கொண்ட பஸ்கள் ஆகும். இந்த பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அரசு பஸ்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

சொகுசு பஸ்களை இயக்க வேண்டும்

இதற்கு காரணம் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் இருப்பது தான். ஆனால் அரசு பஸ்களில் பயணிகளுக்கான வசதிகள் இல்லை என்று பயணிகள் சார்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு பஸ்களில் பயணம் செய்த பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதுபற்றி அவர்கள் அளித்த கருத்துகள் பின்வருமாறு:-

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் திருநெல்வேலியை சேர்ந்த நர்மதா என்ற இளம்பெண் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் திருநெல்வேலி. நான் 6 மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு சென்று வருகிறேன். நான் நிறைய முறை அரசு பஸ்சில் சென்று உள்ளேன். சிறு, சிறு குறைகள் உள்ளன. அதாவது பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகளை சரியாக மூட முடிவதில்லை. மேலும் பஸ்களில் இருக்கை மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் மீது துணிகள் போடப்பட்டு இருக்கும். அந்த துணிகளை பெரும்பாலான பஸ்களில் காண முடிவதில்லை. ஆனால் பெரிய அளவில் எந்த குறையையும் கண்டுபிடிக்கவில்லை. சில நேரம் அரசு பஸ்களில் ஊருக்கு செல்லும் போது கூடுதல் நேரம் ஆகிறது. அதற்காக டிரைவர்களை குறை கூற முடியாது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. நகரை தாண்டி ஓசூருக்கு செல்லவே 2 மணி நேரம் ஆகிறது. சாலையில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தாமதமாக சென்றாலும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். கர்நாடக, கேரள அரசுகள் சார்பில் மல்டி ஆக்சல் வால்வோ, ஸ்கேனியா போன்ற சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல தொலைதூர பயணத்திற்கு தமிழக அரசும் மல்டி ஆக்சல் வால்வோ, ஸ்கேனியா போன்ற சொகுசு பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.சி. வேலை செய்வது இல்லை

கன்னியாகுமரியை சேர்ந்த வினோ என்பவர் கூறுகையில், நான் கன்னியாகுமரியில் துணிக்கடை வைத்து உள்ளேன். எனது கடைக்கு மொத்தமாக துணிகள் வாங்க மாதத்திற்கு ஒரு முறை பெங்களூரு வந்து செல்கிறேன். அங்கு இருந்து வரும் போதும், இங்கிருந்து செல்லும் போதும் அரசு பஸ்சில் தான் வருகிறேன். சில அரசு பஸ்களில் ஏ.சி. சரியாக வேலை செய்வது இல்லை. இருக்கைகளை தங்களது வசதிக்கு ஏற்ப சாய்த்து, நிமிர்த்து கொள்ளும் அட்ஜஸ்ட் செய்ய முடியாத நிலை உள்ளது. ஜன்னல் கண்ணாடிகளை நமது வசதிக்கு ஏற்ப ஏற்றி, இறக்கவும் முடியவில்லை. இதுபற்றி யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. மேலும் வழியில் ஓட்டல்களில் நிறுத்தும் போது விலை உயர்ந்த ஓட்டல்களில் நிறுத்தி விடுகிறார்கள். அந்த ஓட்டல்களில் ஒரு சாதாரண தோசை ரூ.50-க்கு மேல் உள்ளது. டீ, காபி ரூ.20 ஆக உள்ளது. ஏழை, எளிய மக்களால் அந்த ஓட்டலில் சாப்பிட முடியுமா?.

இவ்வாறு வினோ கூறினார்.

ஒரு சில குறைகள் உள்ளன

பெங்களூரு விமான நிலையத்தில் ஊழியராக வேலை செய்யும் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவர் கூறியதாவது:-

பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களின் சேவை நன்றாக உள்ளது. பஸ்கள் தாமதமாக செல்வதாக பயணிகளிடம் இருந்து குற்றச்சாட்டுகள் வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நாம் பயணிக்கும் பஸ் மட்டும் தான் சாலையில் செல்கிறதா?. வழியில் எத்தனை சுங்கச்சாவடிகள், சிக்னல்கள் உள்ளது என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

பயணிகள் பத்திரமாக செல்ல இரவு முழுவதும் கண்விழித்து பஸ்களை ஓட்டும் டிரைவர்களை நினைத்து பார்க்க வேண்டும். தாமதமாக சென்றால் என்ன நடந்து விட போகிறது. எந்தவித பிரச்சினையும் இன்றி பத்திரமாக சென்றாலே போதும். அரசு பஸ்களை பராமரிப்பதில் ஒரு சில குறைகள் உள்ளது. ஜன்னல் கண்ணாடி மூடுவதில்லை. சில இருக்கைகள் பழுதடைந்துள்ளது. மேலும் குறிப்பாக தாபா ஓட்டல்களில் பஸ்களை நிறுத்துகிறார்கள். அங்கு சாதாரண இட்லி, தோசை, புரோட்டா விலை அதிகமாக உள்ளது. இது போன்ற குறைகளை கண்டறிந்து அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். ஆம்னி பஸ்சுக்கு இணையான சேவையை தமிழக அரசு போக்குவரத்து கழகம் வழங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டிரைவர்களை குறை சொல்ல கூடாது

திருநெல்வேலியை சேர்ந்த ஹரிணி என்ற கல்லூரி மாணவி கூறும்போது, நான் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது தமிழக அரசு பஸ்சில் தான் ஊருக்கு செல்கிறேன். பெங்களூருவில் இருந்து புறப்படும் போது எப்போதும் பஸ்கள் 5 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்படுகின்றன. இதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் சரியான நேரத்திற்கு வராதது தான் காரணம். ஏற்கனவே பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம். பெங்களூருவில் உள்ள போக்குவரத்து நெரிசலில் பஸ்களை ஓட்டுவது கஷ்டம் தான். டிரைவர்களை நாம் குறை கூற கூடாது. அவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பஸ் ஓட்டுகிறார்கள். நாம் இறங்கி செல்லும் போது அவர்களுக்கு நன்றி கூற விட்டாலும் பரவாயில்லை. அவர்கள் பற்றி குறை சொல்லாமல் செல்லலாம். அரசு பஸ்கள் ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை ஆகிய பஸ் நிலையங்களுக்கு சென்று தான் செல்கிறது. இதனால் பயண நேரம் அதிகரிக்கிறது.இங்கு இருந்து செல்லும் குளிர்சாதன பஸ்களின் சேவை நன்றாக உள்ளது. தொலை தூர பயணத்திற்கு தமிழக அரசு பஸ்கள் உகந்தது தான். தொலைதூர பஸ்களில் முன்பு டி.வி.கள் பொருத்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் தற்போது எந்த பஸ்களிலும் டி.வி. இல்லை. பஸ்களில் பொழுதுபோக்கிற்காக டி.வி. பொருத்தினால் நன்றாக இருக்கும். பஸ்களில் செல்போன் சார்ஜ் செய்ய வசதி இல்லை. எனக்கு இது தான் குறையாக உள்ளது. மற்றபடி பஸ்கள் சேவை நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவதே குறிக்கோள்

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் உள்ள தமிழக அரசு பஸ் டிக்கெட் கவுண்ட்டரில் அதிகாரியாக பணியாற்றும் அண்ணாமலை என்பவர் கூறியதாவது:-

பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோயம்புத்தூர், சென்னை, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் 120 பஸ்களை இயக்குகிறோம். இந்த பஸ்களின் நிலை நன்றாக உள்ளது. தினமும் பஸ்கள் பணிமனைக்கு வந்ததும் நான் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். பஸ்களில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன். தமிழக அரசுக்கு பயணிகள் பாதுகாப்புக்கு தான் முக்கியம். சற்று தாமதமாக சென்றாலும் பயணிகளை பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் தான் டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு முழுவதும் கண்விழித்து பஸ் ஓட்டும் டிரைவர்களை பயணிகள் நினைத்து பார்க்க வேண்டும். பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவதே தமிழக அரசின் குறிக்கோள். தீபாவளியையொட்டி சாந்திநகரில் இருந்து கூடுதல் 20 முதல் 25 பஸ்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரெயில் பையப்பனஹள்ளியில் இருந்து இயக்கப்படுவதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் தமிழகத்தின் தென்மாவட்ட பயணிகள் தமிழக அரசு பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டுவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. பயணிகள் கோரிக்கை விடுத்தால் அவர்களின் கோரிக்கையை ஏற்று பெங்களூருவில் இருந்து தினமும் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பஸ் டிரைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பயணிகள் கருத்து குறித்து டிரைவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் தகுதி வாய்ந்தவர்கள். எந்த டிரைவர், கண்டக்டர்களையும் குறை கூற முடியாது. பயணிகள் அவர்களது கஷ்டங்களை கூறுகிறார்கள். எங்களுக்கும் கஷ்டம் இருக்கிறது. வேண்டும் என்றே நாங்கள் தாமதமாக செல்வது இல்லை. ஓசூரை தாண்டியதும் 90 கி.மீ வேகத்துக்கு மேல் பஸ்களை ஓட்டுகிறோம். நாங்கள் தாமதமாக இறக்கி விடுவதாக பயணிகள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்கிறோம் என்று நினைத்து கூட பார்ப்பது இல்லை என்பது தான் வேதனை. அனைத்து பஸ் நிலையங்களுக்குள்ளும் நாங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பிட நேரத்திற்குள் செல்ல முடிவதில்லை. ஆம்னி பஸ் டிரைவர்களை போல் கண்ணை மூடிக்கொண்டு பஸ்களை ஓட்ட வேண்டும் என்று பயணிகள் நினைக்கிறார்கள். எங்களால் அப்படி ஓட்ட முடியாது. பயணிகள் பாதுகாப்புக்கு தான் எங்களுக்கு முக்கியம். எங்களை நம்பி பஸ்களில் வரும் பயணிகளின் உயிர் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. அதை பயணிகள் புரிந்து கொள்ளாவிட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

கர்நாடகம், கேரளாவில் தமிழக அரசு பஸ்கள் செல்லும் சாலையில் வேண்டும் என்றே இடையூறு ஏற்படுத்துகிறார்கள். இதுபோன்ற எல்லாவற்றையும் சகித்து கொண்டு தான் பஸ்களை ஓட்டுகிறோம். நாங்கள் விலை உயர்ந்த ஓட்டல்களில் பஸ்களை நிறுத்துவதாக பயணிகள் கூறுகின்றனர். நாங்கள் சாதாரண ஓட்டல்களில் தான் பஸ்களை நிறுத்தி வந்தோம். ஆனால் அங்கு சாப்பாடு சரியில்லை என்று பயணிகள் குறைகூறினர். இதனால் அரசு உத்தரவின்பேரில் விலை உயர்ந்த ஓட்டல்களில் பஸ்களை நிறுத்துகிறோம். பெங்களூருவில் இருந்து புறப்படும் போது டிரிப் சீட்டில் எந்த ஓட்டலில் நிறுத்த வேண்டும் என்று ஓட்டலின் சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கிறார்கள். அரசு கூறிய ஓட்டலில் தான் நிறுத்துகிறோம். அந்த ஓட்டல்களில் நாங்கள் ஒன்றும் நிறைய சாப்பிடவில்லை. இரவில் வயிறு முழுவதும் சாப்பிட்டால் எங்களால் பஸ் ஓட்டவும் முடியாது. அரை வயிறுக்கு தான் சாப்பிடுகிறோம். சில ஓட்டல்களில் டிரைவர்களுக்கு மதிப்பு கிடைப்பது இல்லை. இதுபற்றி நாங்கள் வெளியே சொல்வதும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story