அமித் ஷாவிடம் பேசியது என்ன? - 20 நிமிட சந்திப்புக்குப் பின் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி


அமித் ஷாவிடம் பேசியது என்ன? - 20 நிமிட சந்திப்புக்குப் பின் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 20 Sep 2022 10:11 AM GMT (Updated: 20 Sep 2022 11:37 AM GMT)

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் .கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணி அளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறோம். நானும், வேலுமணி, சி.வி. சண்முகம் அவரை சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

தமிழகத்தை பொறுத்தவரை 2 பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்-அமைச்சராக இருக்கும்போது பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஒன்று கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் தேவையான நீர் கிடைக்கும்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறை பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்தேன். இதையும் பரிசீலிப்பதாக சொன்னார்.

தற்போது அதை வேகப்படுத்தி துரிதப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

2-வது அம்மாவின் அரசு இருந்தபோது பிரதமரிடம் 'நடந்தாய் வாழி காவிரி' என்ற ஒரு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். காவிரி நதியில் கலக்கின்ற மாசுபட்ட நீரை சுத்தம் செய்து காவிரியில் விடுவதற்காக இந்த திட்டம். இந்த திட்டம் இரு அவையின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம் பெற்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தையும் வேகமாக, துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அதோடு தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இதை ஏற்கனவே நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசும்போது முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன். அறிக்கைகள் கொடுத்தோம். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எங்கே போதை பொருள் விற்றாலும் அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி சட்டரீதியாக யார் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களோ, போதைபொருள் விற்பனை செய்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இந்த அரசு மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால், அலட்சியமாக இருக்கின்ற காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதை தி.மு.க. அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தோம்.

அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார்கள். இதனால் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது. அதையும் நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறோம். தமிழகத்தில் எல்லா துறைகளிலும் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எந்த ஒரு துறையிலும், நியாயமாக பணி நடைபெறுவதில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்து இருக்கின்றோம்.

கேள்வி:- அரசியல் சம்பந்தமாக ஏதும் பேசினீர்களா?

பதில்:- அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை.

கேள்வி:- பிரதமரை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?

பதில்:- அந்த திட்டம் எதுவும் இப்போது இல்லை.

கேள்வி:- அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் பற்றி சொல்ல முடியுமா?

பதில்:- அது நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து சொல்ல முடியாது.

கேள்வி:- இடைக்கால பொதுச்செயலாளராக உங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்களே?

பதில்:- எல்லாமே நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தினால் எந்த கருத்துக்களை சொன்னாலும் அது அந்த நீதிமன்ற வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கூறி உள்ளாரே?

பதில்:- அந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரை நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 மாவட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து விட்டேன்.

தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொண்டிருக்கிறேன். சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

தமிழகத்தில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தி இருக்கிறார்கள். வீடுகளுக்கு 100 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சராசரியாக 34 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 12 முதல் 52 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வருடத்திற்கு 6 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

கேள்வி:- இந்த கட்டணம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயர்த்தப்பட்டது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

பதில்:- எங்களின் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது போராட்டம் நடத்தினார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனாவால் 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருக்கிறது. இந்த நிலையில் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கட்டணத்தை உயர்த்துவது முறையா? அதனால் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story