'பயங்கரவாதிகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஜம்முவை காக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும்' - அமித்ஷா உறுதி


பயங்கரவாதிகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஜம்முவை காக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும் - அமித்ஷா உறுதி
x
Image Courtesy : ANI

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி கிராமத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்து மதத்தை சேர்ந்த 3 குடும்பங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்திலலும் டோங்கிரி கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஜம்மு சென்றுள்ளார்.

அங்குள்ள டோங்கிரி கிராமத்திற்கு சென்று பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து பேச அமித்ஷா திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக, சாலைகளில் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அமித்ஷா தொலைபேசியில் பேசினார்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது அமித்ஷா கூறியதாவது;-

"பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருடனும் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர்களை சந்திக்க நானே அங்கு செல்ல இருந்தேன், ஆனால் இன்று வானிலை காரணமாக எங்களால் அங்கு செல்ல முடியவில்லை.

அவர்கள் கூறியவற்றை மிகவும் கவனமாகக் கேட்டேன். மேலும் துணை நிலை கவர்னர் மனோஜிடமும் பேசினேன். உயிர் இழந்தவர்களின் துணிச்சல் நாட்டுக்கே எடுத்துக்காட்டாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஜம்மு-காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் அனைத்து பாதுகாப்பு படைப்பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஜம்முவை பாதுகாக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும் என்று ஜம்மு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story