அசாமில் ஆம்ஆத்மி அரசு அமைந்ததும் டெல்லியை போல வளர்ச்சி ஏற்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்


அசாமில் ஆம்ஆத்மி அரசு அமைந்ததும் டெல்லியை போல வளர்ச்சி ஏற்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்
x

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல் மந்திரிக்கும் இடையே டுவிட்டரில் மோதல் வலுத்து வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும் இடையே சமூக வலைதளமான டுவிட்டரில் மோதல் வலுத்து வருகிறது. அசாமில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் அரசுப் பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடு பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று, அசாமில் மோசமான முடிவுகள் காரணமாக அசாம் மாநில அரசு 34 பள்ளிகளை மூடியதாக வெளியான செய்திகளை குறிப்பிட்டு அத்தகைய அறிக்கைக்கான இணைப்பை கெஜ்ரிவால் டுவிட்டரில் பகிர்ந்தார்.

இதனை தொடர்ந்து இருவருக்குமிடையே அரசுப் பள்ளிகள் சிறப்பாக உள்ளதா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், டெல்லியை லண்டன், பாரிஸ் போல் மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தீர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே ஞாபகம் இல்லையா? உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சிறிய நகரங்களுடன் டெல்லியை ஒப்பிடத் தொடங்குங்கள். என்னை நம்புங்கள். டெல்லியை போன்ற ஒரு நகரத்தையும் வளங்களையும் பாஜக பெற்றால் அதை உலகின் மிக வளமான நகரமாக மாற்றும். என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என்னை நம்புங்கள், அசாமில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்ததும், டெல்லியைப் போன்று வளர்ச்சியை நாங்கள் உருவாக்குவோம். ஊழலை ஒழிப்போம், வளங்களுக்கும் பஞ்சம் இருக்காது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல் மந்திரிக்கும் இடையே டுவிட்டரில் மோதல் வலுத்து வருகிறது.


Next Story