பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து எப்போது? - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்


பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து எப்போது? - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்
x

பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.

புதுடெல்லி,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராேமஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பனில் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் பழுதடைந்துள்ளது. எனவே அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் பணிகள் தொடங்கின. ஆனால் கொரோனா காரணமாக இந்த பணிகளை வேகமாக நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், புதிய பாலத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில், பாம்பன் புதிய பாலம் வழியாக விரைவில் ரெயில் போக்குவரத்து நடைபெறும் என ரெயில்வே வாரிய தலைவர் ஜெய வர்மா சின்கா கூறியுள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பாம்பனில் கட்டப்பட்டிருந்த ரெயில் பாலம் பழமையாகி, பயன்பாட்டுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. எனவே புதிய பாலம் கட்டுவதற்கான தேவை ஏற்பட்டது. 1913-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த பாலம் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயன்படுத்த முடியாததாக அறிவிக்கப்பட்டது. எனவே மண்டபம்-ராமேஸ்வரம் இடையேயான ரெயில் போக்குவரத்து கடந்த 2022 டிசம்பர் 23-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது.

தற்போது அனைத்து ரெயில்களும் மண்டபம் வரையே சென்று வருகின்றன. அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் செல்ல வேண்டிய பயணிகள் சாலை வழியாக சென்று வருகின்றனர். பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வழியாக விரைவில் போக்குவரத்து நடைபெறும்.

பாலம் புனரமைப்புப் பணிகளில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு எமது மக்கள் பாராட்டத்தக்க பணியை செய்துள்ளனர். மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் கடலில் நாட்டிலேயே முதன்முறையாக செங்குத்தான தூக்கு பாலம் அமைப்பது மிகவும் சவாலான பணியாகும். இவ்வாறு ஜெய வர்மா சின்கா தெரிவித்தார்.


Next Story