காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மைசூரு,

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டார். கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது.

மைசூருவில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளது.

ஏற்கனவே நீண்டகாலமாக மேகதாது விவகாரம் தொடர்பான மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வராமல் இருக்கிற நிலையில் தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி தமிழக அரசின் சார்பில் ஒரு முறையீட்டை முன்வைக்க தமிழக அரசு வக்கீல்கள் திட்டமிட்டுள்ளனர்.


Next Story