இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலி: "இது மிகவும் தீவிரமான பிரச்சினை" - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி


இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலி: இது மிகவும் தீவிரமான பிரச்சினை - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி
x

இருமல் மருந்துகளால் காம்பியா நாட்டில் குழந்தைகள் இறந்தது ஒரு தீவிரமான பிரச்சினை என்று விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.

புனே,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளால், காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் இறந்தது ஒரு தீவிரமான பிரச்சினை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறினார்.

அரியானாவின் சோனிபட்டில் உள்ள மெய்டன் மருந்து நிறுவனம் 4 வகையான இருமல் மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

இந்ந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், காம்பியா நாட்டில் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த தகவல்களை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு, இந்த மருந்துகளில் டை எத்திலின் கிளைக்கால் அல்லது எத்திலின் கிளைக்கால் நச்சு கலந்திருக்கலாம் என கூறியிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டம் நேற்று புனேவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கலந்துகொண்டார். அப்போது காம்பியாவில் குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது:-

இந்த மருந்துகளில் டை எத்திலின் கிளைக்கால் நச்சு கலந்திருக்கலாம் என்பதை நிரூபிக்க மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு, அறிக்கையை வழங்கியது.இது மிகவும் தீவிரமான பிரச்சினை மற்றும் இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அளவிலான மருந்து கட்டுப்பாட்டாளர்கள் உள்ளனர் . வெவ்வேறு மாநிலங்களின் கட்டுப்பாட்டாளர்கள் உண்மையில் ஒன்றாக வேலை செய்யவோ அல்லது ஒருவருக்கொருவர் இன்னொருவரின் தயாரிப்புகளை ஆய்வு செய்யவோ வழிமுறை இல்லை.

இங்கே அவர்களின் செயல்பாடுகளை ஒத்திசைக்க வேண்டிய அவசியம் உள்ளது.பொதுவான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் எங்களிடம் மிகவும் வலுவான ஒழுங்குமுறை அமைப்பு உள்ளது என்று நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story