சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு?; சித்தராமையா கருத்தால் பரபரப்பு


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு?; சித்தராமையா கருத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:45 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது தொடர்பாக சித்தராமையா கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கருத்து மோதல்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி முதல்கட்டமாக ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 124 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மூன்று கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கர்நாடக காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்-மந்திரி பதவி விஷயத்தில் அவர்கள் 2 பேரின் ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது, மறைமுகமாக கருத்து மோதல் வந்தது உண்டு. இதில் தலையிட்ட காங்கிரஸ் மேலிடம், முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்றும், முதலில் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் இருவருக்கும் அறிவுறுத்தியது.

2-வது வேட்பாளர் பட்டியல்

சட்டசபை தேர்தல் குறித்து இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரசின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவரை ஒரு தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நேரில் சந்தித்து பேட்டி எடுத்தது. முதல்-மந்திரி பதவி குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில் கூறியதாவது:-

கட்சியின் நாடித்துடிப்பு

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் உள்ளேன். டி.கே.சிவக்குமாரும் அதில் உள்ளார். ஜனநாயகத்தில் இது சகஜமாக நடைபெறும் விஷயம் தான். இதில் தவறு ஒன்றும் இல்லை. டி.கே.சிவக்குமாரோ அல்லது நானோ முதல்-மந்திரி ஆனால் தவறு இல்லை. இறுதியாக புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் தான் முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்வார்கள்.

களத்தின் உண்மை நிலையை அறிந்து கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். மக்களின் நாடித்துடிப்பே கட்சியின் நாடித்துடிப்பு. அதாவது மக்களின் மனநிலையே கட்சியின் மனநிலையாக இருக்கும். முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமாரை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுவது இல்லை. ஜனநாயக முறைப்படி முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சித்தராமையா மறுப்பு

இதை சித்தராமையா முற்றிலுமாக மறுத்துள்ளார். தான் அவ்வாறு கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "முதல்-மந்திரி பதவி குறித்து நான் கூறாத கருத்துக்களை ஒரு தனியார் ஆங்கில சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானது, உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது ஆகும். நான் கூறிய கருத்து திரிக்கப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சி உடனடியாக அந்த செய்தியை நீக்க வேண்டும். எங்கள் கட்சியின் முதல்-மந்திரியை கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி மேலிடம் சேர்ந்து முடிவு எடுக்கும் என்று 100 முறை கூறியுள்ளேன். எனக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு ஊடகங்கள் ஆயுதமாக இருக்க கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்தில் பா.ஜனதாவின் பலம் குறைந்து வருகிறது. தினமும் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். அதனால் தான் பா.ஜனதா அதானியின் கீழ் இயங்கும் செய்தி தொலைக்காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர்கள் இடையே செயற்கையாக கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. அதனால் பா.ஜனதாவை காப்பாற்றும் வேலையை நிறுத்த வேண்டும். 40 சதவீத பா.ஜனதா அரசு அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் தன்னிச்சையாக முதல்-மந்திரி ஆக்காது என்ற ரீதியில் சித்தராமையாவின் கருத்து அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story