மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் பா.ஜனதாவின் 'பி டீம்' யார் என்பது தெரியும்; குமாரசாமி பேட்டி


மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் பா.ஜனதாவின் பி டீம் யார் என்பது தெரியும்; குமாரசாமி பேட்டி
x

குமாரசாமி

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் பா.ஜனதாவின் பி. அணி யார் என்பது தெரியும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி:

உப்பள்ளியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் மீது நம்பிக்கை

மாநிலங்களவையில் காலியாக உள்ள 4 உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் குபேந்திர ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எங்கள் கட்சியில் 32 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது.

4-வது உறுப்பினர் பதவிக்காக 3 கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 4-வது உறுப்பினர் வெற்றி பெற ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாய்ப்புள்ளது. எங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வெற்றி பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

'பி டீம்' யார் என்பது...

எங்கள் கட்சி உள்பட பிற கட்சிகளை சேர்ந்தவர்களையும் அனுசரித்து செல்வோம். மாநிலங்களவை தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மாநிலங்களவை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஒரே கல்லில் 2 மாங்காய் விழ செய்திருப்பதாக நினைத்து கொள்கிறார். அது நடைபெற சாத்தியமில்லை. அவர் எறியும் கல், அவரது தலை மீதே வந்து விழும்.

பா.ஜனதா கட்சியின் 'பி டீம்' ஜனதாதளம் (எஸ்) என்று காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் பா.ஜனதா கட்சியின் 'பி டீம்' யார் என்பது தெரிந்துவிடும். மாநிலங்களவை தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக யாருடனும் சென்று பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன்.

யாருடனும் பேச மாட்டேன்

எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமானால், காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் யாருடனும் பேசவில்லை. பேசவும் மாட்டேன். எங்கள் கட்சி வேட்பாளர் மாநிலங்களவை தேர்தலில் தோல்வி அடைந்தால், எந்த விதமான நஷ்டமும் இல்லை. எங்களது நோக்கம், அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்காக தான் கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story