காந்திநகர் தொகுதியில் வெற்றி பெறபோவது யார்?
தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்திநகர் தொகுதியில் வெற்றி பெறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவின் மையப்பகுதியாக விளங்குகிறது, காந்திநகர் தொகுதி. பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள், சிட்டி ரெயில் நிலையம், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என எப்போதும் மக்கள் நெருக்கடி உள்ள பகுதியாக இந்த தொகுதி காட்சி அளிக்கிறது. ஆனால் இந்த பகுதியில் நடுத்தர மக்களே அதிகம் உள்ளதால் வாக்களிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் அவரே மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி கடந்த முறை தோல்வி அடைந்த நாராயணசாமியை இங்கு வேட்பாளராக அறிவித்துள்ளது. பா.ஜனதா சார்பில் சப்தகிரி கவுடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொகுதியில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், சுபாஷ் நகர், காட்டன்பேட்டை, பின்னிபேட்டை, ஒகலிபுரம், தத்தாத்ரேயா கோவில் ஆகிய 6 வார்டுகள் உள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 350 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 719 ஆண்களும், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 607 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 24 பேரும் அடங்குவர். சட்டசபை தேர்தலையொட்டி இங்கு 231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக தமிழ் பேசும் மக்கள் இருந்து வருகின்றனர். இங்கு சுமார் 85 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2018 வரை 14 தேர்தல்கள் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 10 முறையும், இந்திரா காங்கிரஸ் ஒருமுறையும், ஜனதா கட்சி 2 முறையும், அ.தி.மு.க. ஒருமுறையும் வெற்றி வாகை சூடி உள்ளது. காந்திநகர் தொகுதியில் காங்கிரசின் தினேஷ் குண்டுராவ் தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில், சாலை பள்ளம், குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தாலும், எந்த நேரமும் தினேஷ் குண்டுராவை சந்தித்து பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க முடியும் என்பதும், முடிந்த அளவு அந்த புகார்களை சரிசெய்ய அவர் முயற்சி எடுத்து வருவதும் அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் அதிகம் வாழும் இந்த தொகுதியில் தினேஷ் குண்டுராவ் தனது தொடர் வெற்றியை ருசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதே நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர் சப்தகிரி கவுடாவும் காந்திநகர் தொகுதியில் தீவிர களப்பணியாற்றி வருகிறார். அவர் எப்போதும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். இதனால் காந்திநகர் தொகுதியில் சப்தகிரிகவுடாவுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அவர், தினேஷ் குண்டுராவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுவாரா?
என்பது மக்கள் கையில் தான் உள்ளது.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
ஆண்டு வெற்றி தோல்வி
1957 நாகரத்னம்மா(காங்.) 12,679 லிங்கய்யா(சுயே.) 4,581
1962 நாகரத்னம்மா ஹிரேமட்(காங்.) 12,958 எச்.எல்.நஞ்சப்பா(சுயே.) 7,051
1967 ஹிரேமட்(காங்.) 11,638 எஸ்.வி.பதி(சுயே.) 9,238
1972 ஸ்ரீராமுலு(காங்.) 12,812 வேணுகோபால்(சுயே.) 11,535
1978 லட்சுமணன்(காங்.-இந்திரா) 18,372 ஜெயராம்(ஜனதா கட்சி) 15,202
1983 எம்.எஸ்.நாராயணராவ்(ஜனதா கட்சி) 28,604 ஹரிபிரசாத்(காங்.) 19511
1985 எம்.எஸ்.நாராயணராவ்(ஜனதா கட்சி) 20,671 பீமராய்க்கர்(காங்.) 16,715
1989 தயானந்தராவ்(காங்.) 37,767 லீலாதேவி பிரசாத்(ஜ.த.கட்சி) 12,617
1994 முனியப்பா(அ.தி.மு.க.) 16,893 தயானந்த்(காங்.) 14,227
1999 தினேஷ் குண்டுராவ்(காங்.) 15,634 நாகராஜ்(சுயே.) 14,519
2004 தினேஷ் குண்டுராவ்(காங்.) 40,797 நாகராஜ்(ஜ.தளம்-எஸ்) 12,529
2008 தினேஷ் குண்டுராவ்(காங்.) 41,188 பி.சி.மோகன்(பா.ஜ.க.) 34,242
2013 தினேஷ் குண்டுராவ்(காங்.) 54,968 பி.சி.மோகன்(பா.ஜ.க.) 32,361
2018 தினேஷ் குண்டுராவ்(காங்.) 47,354 சப்தகிரி கவுடா(பா.ஜ.க.) 37,284