காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்படும் போது பாஜக, ஆர்எஸ்எஸ் ஏன் அமைதியாக இருக்கிறது? - சத்தீஸ்கர் முதல் மந்திரி

Image Courtesy : ANI
பூபேஷ் பாகேல் காஷ்மீரில் நடந்து வரும் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு ,
காஷ்மீரில் சமீபகாலமாக வெளிமாநிலத்தினரையும், பண்டிட் சமூகத்தினரையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 12-ந்தேதி, ராகுல்பட் என்ற தாலுகா அலுவலக ஊழியரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
அவர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். குல்காம் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பண்டிட் சமூகத்தை சேர்ந்த ரஜினி பாலா என்ற ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, குல்காம் மாவட்டத்தில் நேற்று வங்கி மேலாளர் ஒருவரை பயங்கரவாதிகள் கொலை செய்தனர்.
இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் 16 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். கடந்த மே 1-ந்தேதியில் இருந்து குறிவைத்து நடந்த கொலைகள் மட்டும் 8 ஆகும். அவற்றில் முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் காஷ்மீரில் நடந்து வரும் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், " ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்படும்போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-சை சேர்ந்தவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?.
சட்டப்பிரிவு 370 ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீரை 3 பிரிவுகளாகப் பிரித்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் ஏன் இப்போது நிலைமை சாதாரணமாக இல்லை. அவர்களின் திட்டம் முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால், பொது மக்களை எப்படிப் பாதுகாப்பது? " என அவர் கேள்வி எழுப்பினார்.