நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? இஸ்ரோ தலைவர் விளக்கம்


நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? இஸ்ரோ தலைவர் விளக்கம்
x
தினத்தந்தி 24 Aug 2023 10:39 AM GMT (Updated: 24 Aug 2023 2:15 PM GMT)

நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், பின்னர் நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது.

தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பியது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என்று தெரிவித்தது. இந்த நிலையில், நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று விளக்கமளித்து உள்ளார்.

அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, சந்திரயான்-2 உதவியுடன் நிலவில் இருந்து எங்களால் எதனையும் பெற முடியவில்லை. அதனால் இந்த திட்டத்திற்காக ஒவ்வொன்றையும் புதிதாக செய்ய வேண்டியிருந்தது. முதல் ஆண்டில் சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை கண்டறிய நேரம் செலவிட்டோம்.

அடுத்த ஆண்டு ஒவ்வொரு விசயமும் அலசி ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.

ஆனால், கொரோனா பெருந்தொற்றால் எங்களுடைய திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து நாங்கள் சில ராக்கெட்டுகளை செலுத்தி வந்தோம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மீண்டும் எங்கள் பணி தொடர்ந்தது.

சந்திரயான்-3 ன் ஒட்டு மொத்த திட்டமும் நிலவின் தென்துருவம் அல்லது அதன் அருகே தரையிறங்குவது ஆகும். தென்துருவத்தில் அறிவியல் சார்ந்த விசயங்களுக்கான சாத்தியங்கள் பெரிய அளவில் உள்ளன.

நிலவில் நீர் மற்றும் தாதுபொருட்கள் இருப்பதற்கான சாத்தியங்களுடன் அவை தொடர்புடையவை. பிற விசயங்களையும் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள். அந்த பகுதிகளில் ஆய்வு செய்வது என எங்களுடைய 5 உபகரணங்கள் இலக்கை கொண்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

நிலவின் ஒரு நாளின் பகல் பொழுது, பூமியின் 14 நாட்களுக்கு சமம். நிலவின் இந்த ஒரு பகல் பொழுதுக்குள் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்ஞான் ரோவர் இரண்டும் தங்களுடைய இயக்க பணியை மேற்கொள்ளும். நிலவில் சிறப்பு பணிகளை மேற்கொள்ள லேண்டரில் 5 உபகரணங்கள் உள்ளன.

சந்திரயான்-3 விண்கல திட்டத்தின் கண்டுபிடிப்புகளில் இருந்து, நிலவில் நீர், பனி உள்ளிட்ட அதிக மதிப்பு வாய்ந்த வளங்களை பற்றிய அறிவை நாம் நவீனப்படுத்தவும், விரிவுப்படுத்தி கொள்ளவும் முடியும்.


Next Story