வக்கீல் மீது வழக்குப்பதிவு: நிருபர்கள் சந்திப்பின்போது மயங்கி விழுந்த ஸ்வப்னா சுரேஷ்


வக்கீல் மீது வழக்குப்பதிவு: நிருபர்கள் சந்திப்பின்போது மயங்கி விழுந்த ஸ்வப்னா சுரேஷ்
x

தனது வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, ஸ்வப்னா சுரேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலக்காடு,

தங்கம் கடத்தல் வழக்கு

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் கேரள தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 8 கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கொச்சி கோர்ட்டில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், அதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறினார்.

இந்த பேட்டியால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரி பினராயி விஜயனை பதவி வலகக்கோரி எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

வக்கீல் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக வக்கீல் கிருஷ்ணராஜ் மீது சட்டப்பிரிவு 295 ஏ-ன் கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று நேற்று மாலை பாலக்காட்டில் உள்ள வீட்டில் வைத்து நிருபர்களுக்கு ஸ்வப்னா சுரேஷ் பேட்டியளித்தார்.

ஸ்வப்னா சுரேஷ் மயங்கி விழுந்தார்

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தனது வக்கீல் மீதும் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை சுற்றி உள்ளவர்களை போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். மேலும் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி வருகின்றனர் என்று கூறி அழுதார்.

அப்போது ஸ்வப்னா சுரேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story