கர்நாடகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்? மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
கர்நாடகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
மங்களூரு-
கர்நாடகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக நேற்று தனி ஹெலிகாப்டர் மூலம் மங்களூருவுக்கு வந்தார்.
பின்னர் அவர் மங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாத்தியமில்லை
ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும். கர்நாடகாவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நிர்வாகம் மற்றும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பேச வேண்டும். கமிஷன் இல்லாமல் மாநிலத்தில் எந்த வேலையும் சாத்தியமில்லை.
ஆட்சி, வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்த கர்நாடகம் தற்போது பா.ஜனதாவின் சூழ்ச்சியால் அனைத்து நற்பெயரையும் இழந்து நிற்கிறது. இங்குள்ள 40 சதவீத கமிஷன் நிலவரம் அனைவருக்கும் தெரியும். நான் ஆதாரம் கொடுக்க வேண்டியதில்லை. கமிஷன் விவகாரம் குறித்து ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர், கவர்னர் தாவர்சந்த் கெலாட் மற்றும் லோக் அயுக்தாவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
மக்கள் பெரிதும் பாதிப்பு
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்க துறையை பா.ஜனதாவினர் தூண்டி விட்டுள்ளனர். நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கூறினர். ஆனால் அவர்கள் தற்போது கர்நாடகத்தில் நடக்கும் ஊழல்களை பற்றி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?. வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவது இல்லை.
தற்போதைய நிலையில் மத்திய அரசு துறைகளிலேயே சுமார் 3 லட்சம் பணி இடங்கள் காலியாக உள்ளன. 40 சதவீத கமிஷன் ஆட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
யோசித்து பேசுவது நல்லது
காங்கிரஸ் எப்போதும் வளர்ச்சி பணிகளை செய்வதில் முன்னணியில் உள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தது. அவர்கள் இந்த 8 வருடங்களில் என்ன செய்தார்கள். மொரார்ஜி தேசாய் மற்றும் ஜே.கே.குஜராலை மறந்து விடுகிறார்கள். பா.ஜனதாவினர் ஒரு கருத்தை தெரிவிப்பதற்கு முன்பு தங்களது முந்தைய நாட்களைப் பற்றி யோசித்து பேசுவது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஷ்குமார், முன்னாள் மந்திரி யு.டி.காதர் உள்பட பலர் உடனிருந்தனர்.