குடகு மாவட்டத்தில் பரவலாக மழை
குடகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடகு-
குடகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடகில் மழை
கர்நாடகத்தில் தற்போது கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தாலும், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்று குடகு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. விராஜ்பேட்டை, சித்தாப்புரா, கரடிகோடு, குய்யா உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. திடீர் மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கலந்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சித்தாப்புரா-மைசூரு சாலை, கரடிகோடு, குய்யா பகுதிகளில் ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக மக்கள் இருளில் மூழ்கி பரிதவித்தனர்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு
இந்த மழையால் காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலையில் பெஸ்காம் அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டுக்கான பருவமழை வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் குடகு மாவட்டத்தில் தற்போதே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.