வியாபாரி கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது


வியாபாரி கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரி, தூக்கில் தொங்கிய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் அவரை அவரது மனைவியே காதலனுடன் சேர்ந்து கொன்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:-

கள்ளக்காதல்

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் தேவரஹிப்பரகி தாலுகா சட்டரகி கிராமத்தில் வசித்து வந்தவர் சைபான். இவரது மனைவி ராஜ்மா. சைபான் சிறு வியாபாரி ஆவார். இவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி ஆவார். நண்பன் என்ற முறையில் சைபானின் வீட்டுக்கு அப்பாஸ் அலி அடிக்கடி சென்று வந்தார். அதன்மூலம் சைபானின் மனைவி ராஜ்மாவுக்கும், அப்பாஸ் அலிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 10-ந் தேதி அன்று கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. அதையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டுவிட்டு வீடு திரும்பிய சைபான், பின்னர் வீட்டில் திடீரென தூக்கில் தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ராஜ்மா அக்கம்பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதார்.

திடுக்கிடும் தகவல்கள்

அதையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் சைபானின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கிராமம் அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். அதையடுத்து ராஜ்மா தனிமையில் வசித்து வந்தார். மேலும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சைபானின் நண்பர் அப்பாஸ் அலி சென்று வந்தார். மேலும் அவர்களது நடவடிக்கையிலும் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதையடுத்து அவர்களும், சைபானின் குடும்பத்தினரும் சேர்ந்து இதுபற்றி தேவரஹிப்பரகி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அப்பாஸ் அலி மற்றும் ராஜ்மாவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உல்லாசமாக இருப்பதை...

அதாவது கடந்த மே மாதம் 10-ந் தேதி ஓட்டுப்பதிவு அன்று சைபான் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டுவிட்டு வீடு திரும்பினார். இந்த நேரத்தில் அவரது

வீட்டுக்கு சென்ற அப்பாஸ் அலி, சைபானின் மனைவி ராஜ்மாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே வீடு திரும்பிய சைபான், மனைவி ராஜ்மாவும், நண்பன் அப்பாஸ் அலியும் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கடும் கோபம் அடைந்த அவர் அவர்கள் இருவரை கண்டித்து தகராறு செய்தார். தாங்கள் கையும், களவுமாக சிக்கிவிட்டதால் செய்வதறியாது திகைத்து நின்ற ராஜ்மாவும், அப்பாஸ் அலியும் சேர்ந்து சைபானை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சைபான் பரிதாபமாக இறந்துள்ளார்.

கைது

அதையடுத்து சைபானின் உடலை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு அப்பாஸ் அலி அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு சைபான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி ராஜ்மா நாடகமாடி அவர்களை நம்ப வைத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் ராஜ்மா மற்றும் அப்பாஸ் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் தாசில்தார் முன்னிலையில் சைபானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்ததை கணவன் நேரில் பார்த்துவிட்டதால் அவரை மனைவியே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story