வியாபாரி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது


வியாபாரி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்:  கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது
x

விஜயாப்புராவில் மாரடைப்பால் வியாபாரி இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கள்ளக்காதலனுடன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு: விஜயாப்புராவில் மாரடைப்பால் வியாபாரி இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கள்ளக்காதலனுடன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

ஆசிரியருக்கு கள்ளத்தொடர்பு

விஜயாப்புரா மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ் (வயது 40). வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி (32). இவர், அங்கன்வாடியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி பிரகாஷ் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக ராஜேஸ்வரி கூறினார். இதனை கிராம மக்களும் நம்பினார்கள்.

ஆனால் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி விஜயாப்புரா புறநகர் போலீஸ் நிலையத்தில் பிரகாசின் தந்தை லட்சுமணா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ராஜேஸ்வரிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

தூக்க மாத்திரைகள் கொடுத்து...

அத்துடன் ரவியுடன் 3 முறை ராஜேஸ்வரி வீட்டை விட்டு ஓடி இருந்தார். அவரை, பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் சமாதானமாக பேசி அழைத்து வந்திருந்தனர். இதன்காரணமாக பிரகாசை ராஜேஸ்வரியே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலன் ரவி மற்றும் அவரது நண்பர் குருபாதா ஆகியோருடன் சேர்ந்து பிரகாசை கொலை செய்திருப்பதாக ராஜேஸ்வரி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, ராஜேஸ்வரி, ரவி, குருபாதாவை போலீசார் கைது செய்தாா்கள்.

ரவியுடன், ராஜேஸ்வரிக்கு இருந்த கள்ளத்தொடர்பை பிரகாஷ் கண்டித்துள்ளார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் பிரகாசை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரைகளை கலந்து பிரகாசுக்கு ராஜேஸ்வரி கொடுத்துள்ளார். பின்னர் அயர்ந்து தூங்கிய அவரின் கழுத்தை நெரித்து ராஜேஸ்வரி உள்பட 3 பேரும் கொன்றதுடன், மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. கைதான 3 பேர் மீதும் விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story