மனைவியின் தெய்வீக சக்தி டி.கே.சிவக்குமாரை காப்பாற்றி உள்ளது - ஜோதிடர் பரபரப்பு தகவல்


மனைவியின் தெய்வீக சக்தி டி.கே.சிவக்குமாரை காப்பாற்றி உள்ளது - ஜோதிடர் பரபரப்பு தகவல்
x

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய டி.கே.சிவக்குமார் பற்றி ஜோதிடர் ஒருவர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் பெங்களூருவில் இருந்து கோலார் மாவட்டம் முல்பாகல் சென்ற போது கழுகு ஹெலிகாப்டரின் கண்ணாடி மீது மோதியது. இதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த விபத்தில் டி.கே.சிவக்குமார், பைலட் உள்பட அனைவரும் உயிர் தப்பினர். கடவுள் மீது நம்பிக்கை கொண்ட டி.ேக.சிவக்குமார் நேற்று துமகூரு மாவட்டம் துருவக்கெரே சென்று அஜ்ஜய்யா மடத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியதால் டி.கே.சிவக்குமார் அஜ்ஜய்யா சாமியிடம் ஆசி பெற்றதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே விபத்தில் இருந்து தப்பிய டி.கே.சிவக்குமாருக்கு பிரபல ஜோதிடர் துவாரகநாத் சில பரிகாரங்களை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:-

டி.கே.சிவக்குமாரின் மனைவி உஷாவின் கிரக நிலையால் அவர் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். டி.கே.சிவக்குமாருக்கு தற்போது குருபாலா அல்லது சனி பாலா இல்லை. இருப்பினும் அவரது மனைவி உஷாவின் கிரக நிலை நன்றாக இருப்பதால் அந்த தெய்வீக சக்தி டி.கே.சிவக்குமாரை காப்பாற்றி உள்ளது.

ஹெலிகாப்டர் மீது மோதிய கழுகு உயிரிழந்துள்ளது. எனவே பஞ்ச பக்ஷி சாஸ்திரநிபுணர் கஜேந்திரனிடம் பேசி, சாஸ்திரப்படி பெங்களூரு அல்சூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமேஸ்வர் கோவிலில் ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் குக்கே சுப்பிரமணிய கோவிலுக்கு 22 நாட்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி டி.கே.சிவக்குமார் பரிகார பூஜை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டி.கே.சிவக்குமாரை கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராக கட்சி மேலிடம் முடிவு செய்திருந்தது. ஆனால் 3 முறை அவர் பதவி ஏற்பதில் சிக்கல் உண்டானது. அதையடுத்து அவர் துருவக்கெரே அஜ்ஜய்யா மடத்திற்கு சென்று வழிபட்டதாகவும், மடாதிபதி கூறிய படி சிவ பூஜை செய்ததால் கர்நாடக காங்கிரஸ் தலைவராக அவர் பதவி ஏற்றக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story